பிரார்த்தனை

அழகிய பிரார்த்தனை

 யா அல்லாஹ்! எனது தீனிலும் துன்யாவிலும், குடும்பத்திலும், பொருளிலும் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் தந்தருள உன்னை வேண்டுகிறேன். யா அல்லாஹ் எனது வெட்கத்தலங்களை மறைத்தருள்வாளாக! எனது பயங்களை விட்டும் என்னை நிர்ப்பயமான வனாக்குவாயாக! எனது முன்புறம் பின்புறம், வலப்புறம், இடப்புறம், மேல்புறம் கீழ்ப்புறம் எல்லா திசைகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! எனது கீழ்பாகத்திலிருந்து நான் தாக்கப்படுவதை விட்டும் உன் வலுப்பத்தைக் கொண்டு காவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ்! எனது உடலிலும், கேள்வியிலும் பார்வையிலும் ஆரோக்கியத்தைத் தந்தருள்வாயாக. வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. இறை நிராகரிப்பு, ஏழ்மை, மண்ணறை வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் காவல் தேடுகிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை.

யா அல்லாஹ்! நீயே என்னைப் படைத்து பரிபாலிப்பவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை. என்னால் இயன்றவரை உனக்களித்த வாக்குறுதியையும், உன்னுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தையும் நிறைவேற்றக் கூடியவனாக இருக்கிறேன். நான் செய்த தீங்கிலிருந்து உன்னிடம் காவல் தேடுகிறேன்.எனக்கு சகல சௌபாக்கியங்களையும் அருளினாய் என நான் ஒப்புக் கொள்கிறேன். என் பாவத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவே எனது பாவத்தை மன்னித்தருள்வாயாக. பாவங்களை மன்னிப்பவன் உன்னைத் தவிர யாரும் இல்லை. இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், முதலியவற்றிலிருந்தும், கடன் அதிகரிப்பதை விட்டும், மனிதர்கள் ஆதிக்கத்தை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ்! இன்றைய தினத்தின் ஆரம்பத்தை நலவானதாகவும், பகுதியை வெற்றியானதாகவும், இறுதியை ஜெயமானதாகவும் ஆக்கியருள்வாயாக. ஈருலகிலும் நல்லவற்றைத் தருவாயாக. மரணத்திற்குப்பின் நல்வாழ்வையும். சங்கைக் குரிய உன் திருமுகத்தைக் கண்டு மகிழும் பாக்கியத்தையும், எவ்வித தங்கடங்கள் குழப்பங்களின்றி உன்னைச் சந்திக்கும் பெரும் பேற்றையும் தந்தருள உன்னை வேண்டுகிறேன்.

யா அல்லாஹ்! நான் பிறருக்கு அநீதி இழைப்பதிலிருந்தும், பிறரால் அநீதி இழைக்கப் படுவதிலிருந்தும், பிறரை நான் தாக்குவதிலிருந்தும், பிறர் என்னைத் தாக்குவதிலிருந்தும், தவறைச் சம்பாதிப்பதிலிருந்தும், மன்னிக்கப்படாத பாவத்திலிருந்தும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.யா அல்லாஹ்! சோதனையான முதுமையை விட்டும், உன்னிடம் காவல் தேடுகிறேன். நற்குணங்களின் பக்கம் எனக்கு வழிகாட்டுவாயாயக. அவற்றில் நல்லவற்றைக் காண்பிப்பவன் உன்னைத் தவிர யாருமில்லை. தவறான செயல்கள், தவறான குணங்களை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக. தவறுகளை விட்டும் காப்பாற்றக் கூடியவன் உன்னைத் தவிர யாருமில்லை.

யா அல்லாஹ்! எனது மார்க்கத்தைச் சீர்ப்படுத்துவாயாக. எனது இருப்பிடத்தை விசாலப் படுத்துவாயாயக. எனது ரிஜ்கில் பரக்கத்தை ஏற்படுத்துவாயாக. முரட்டுத்தனம், பொடுபோக்கு, இழிவு முதலிய கெட்ட குணங்களை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக.

யா அல்லாஹ்! செவிடு, ஊமை, குஷ்டம், கொடு நோய், முதலியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன். எனக்கு இறையச்சத்தைத் தந்து என்னைத் தூய்மைப் படுத்துவாயாக. தூய்மைப்படுத்துபவர்களில் நீயே சிறந்தவன். நீயே எனது அதிபதி.

யா அல்லாஹ்! பயனற்ற கல்வி, பயமற்ற உள்ளம், நிறவைடையா மனம், ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனை, ஆகியவற்றிலிருந்தும், நான் செய்த தீங்கு, செய்யாத தீங்கு, நான் அறிற்து செய்த பிழைகள், அறியாமல் செய்த பிழைகள், அனைத்திலிருந்தும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ்!நீ எனக்கருளிய அருட்கொடைகளும், ஆரோக்கியமும், என்னை விட்டுப் போய்விடுவதை விட்டும், திடீரென வரும் உன் வேதனைகளை விட்டும், உன்னுடைய எல்லாக் கோபங்களை விட்டும், உன்னிடம் காவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ்! கட்டடங்கள் இடிந்து விழுதல், தவறிவிழுதல், தண்ணீரில் மூழ்குதல், நெருப்பில் கரியுதல், இயலாத முதுமை, ஆகியவற்றிலிருந்தும், மரண நேரத்தில் ஷைத்தான் என்னை வழி கெடுப்பதை விட்டும், கொடிய விஷப் பிராணிகள் கொட்டி மரணமடைவதிலிருந்தும், இழுக்களவில் கொண்டு சேர்க்கும்படியான பேராசையை விட்டும், கெட்ட குணங்கள், கெட்ட செயல்கள், கெட்ட நோய்கள், கெட்ட எண்ணங்கள், ஆகியவற்றவை விட்டும், கடன் அதிகரிப்பதை விட்டும், எதிரிகளின் ஆதிக்கத்தை விட்டும், எங்களுக்கு ஏற்படும் தங்கடங்கள் மீது எதிரிகள் மகிழ்ச்சியடைவதை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ்! எனது செயல்களில் பாதுகாப்பாக எனது மார்க்கத்தையும், பிழைப்பிருக்கும்படியாக எனது இம்மை வாழ்வையும், நான் திரும்பச் செல்லவிருக்கும் எனது மறுமை வாழ்வையும், சீர்படுத்துவாயாக! நன்மையான செயல்களை அதிகம் செய்யும்படியாக எனது வாழ்க்கையையும், அனைத்துத் தீமைகளை விட்டும் நிவர்த்தியானதாக எனது மரணத்தையும், ஆக்கியருள்வாயாக. என்னைப் படைத்தவனே எனக்கு ஆதரவாக உதவியளி, எதிராக உதவாதே. எனக்கு சாதகமாக ஆதரவளி, பாதகமாக ஆதரவளிக்காதே. எனக்கு நேர்வழி காட்டி அவ்வழியை எளிதாக்கியருள்வாயாக.

யா அல்லாஹ்! உன்னை அதிகம் நினைக்கக் கூடியவனாகவும், அதிகம் வழிப்படக் கூடியவனாகவும், அதிகம் அஞ்சக் கூடியவனாகவும், உன் பக்கமே அதிகம் மீள்பனாகவும் என்னை ஆக்கியருள்வாயாக.

யா அல்லாஹ்! பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக. என் பாவத்தைத் தூய்மைப் படுத்துவாயாக. எனது பிரார்த்தணைக்கு பதிலளிப்பாயாக. என்னுடைய ஆதாரத்தை உறுதிபெறச் செய்வாயாக. எனது உள்ளத்தை நேர்வழிப்படுத்துவாயாக. எனது நாவை உறுதியாக்குவாயாக. பொறாமை நெஞ்சில் குடி கொள்வதை விட்டும் என்னை அப்பாற்படுத்துவாயாக.

யா அல்லாஹ்! என்னுடைய செயல்களில் நான் நிலைபட்டிருப்பதையும், நேர் வழியில் நான் உறுதியுடன் இருப்பதையும், உன்னிடம் கேட்கிறேன். நீ எனக்கு அருளிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி உன்னை நன்முறையில் வணங்கக் கூடியவனாக என்னை ஆக்கிவைப்பாயாக.

யா அல்லாஹ்! குறையற்ற உள்ளத்தையும், உண்மை பேசும் நாவையும், தந்தருள உன்னிடம் வேண்டுகிறேன். நீ நன்மை என அறிந்த அனைத்தையும் தந்தருள உன்னிடம் வேண்டுகிறேன். நீ தீமை என அறிந்த அனைத்திலிருந்தும் உன்னிடம் காவல் தேடுகிறேன். நீ அறிந்த அனைத்திலும் பிழை பொறுக்கத் தேடுகிறேன். மறைவானவற்றை நீயே நன்கறிந்தவன்.

யா அல்லாஹ்! நேர் வழியில் செல்ல எனக்கு மன உதிப்பைத் தருவாயாக. எனது ஆன்மாவின் தீங்கை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக. நல்லவற்றை செய்வதையும், தீயவற்றை விடுவதையும், ஏழைகளை நேசிப்பதையும் உன்னிடம் கேட்கிறேன். பாவ மன்னிப்பை உன்னிடம் கேட்கிறேன். உனது அடியார்களைச் சோதிக்க நீ நாடினால் அச்சோதனையில் நான் சிக்காமல் என்னை மரணிக்கச் செய்வாயாக.

யா அல்லாஹ்! உனது நேசத்தையும், உன்னை நேசிப்போர் நேசத்தையும், உனது நேசத்தின் பக்கம் கொண்டு சேர்க்கும் அனைத்து செயல்களையும் நேசிப்பதையும், உன்னிடம் கேட்கிறேன்.

யா அல்லாஹ்! நல்ல கேள்வியையும், நல்ல துஆவையும், நல்ல வெற்றியையும், நற்கூலியையும் எனக்குத் தந்தருள்வாயாக. என்னை நிலையானவனாக ஆக்கி, எனது நன்மையின் எடையை அதிகரிப்பாயாக. எனது ஈமானை முழுமைப்படுத்துவாயாக. சுவனத்தில் எனது தரத்தை உயர்த்துவாயாக. எனது தொழுகைகளை ஏற்றுக் கொள்வாயாக. எனது தவறுகளை மன்னிப்பாயாக. சுவனத்தில் உயர்ந்த பதவியைத் தருவாயாக.

யா அல்லாஹ்! நற்செயல்களின் திறவுகோலையும், அதன் நல்ல துவக்கத்தையும், நல்ல முடிவையும், அக புற நன்மைகள் அனைத்தையும் உன்னிடம் கேட்கிறேன். சுவனத்தில் உயர்ந்த பொறுப்புகளைத் தருவாயாக.

யா அல்லாஹ்! எனது சிறப்பை உயர்த்துவாயாக. பாவத்தை விட்டுவிடுவாயாக. என் உள்ளத்தை; தூய்மைப் படுத்துவாயாக. எனது வெட்கத்தலங்களைப் பாதுகாப்பாயாக. எனது பாவங்களை மன்னிப்பாயாக. சுவனத்தில் உயர்பதவியைத் தருவாயாக. என்னுடைய கேள்வி, பார்வை, ஆத்மா, தோற்றம், குணம், அனைத்திலும் பரக்கத் செய்லாயாக.

யா அல்லாஹ்! எனது குடும்பம், எனது வாழ்க்கை, எனது அறிவு ஆகிய அனைத்திலும் பரக்கத் செய்வாயாக. எனது நற்செயல்களை அங்கீகரித்து சுவனத்தில் உயர் பதவியைத் தருவாயாக.உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலக்கச் செய்வாயாக. உள்ளங்களையும் பார்வைகளையும் திருப்பக் கூடியவனே! எங்கள் உள்ளங்களை உன்னை வழிபடுவதன் பக்கம் திருப்புவாயாக. நன்மையைக் குறைக்காமல் அதிகம் தருவாயாக. இழிவு படுத்தாமல் எங்களை சங்கைப் படுத்துவாயாக. இல்லை எனச் சொல்லாமல் தருவாயாக. குறைவின்றிக் கொடுப்பாயாக.

யா அல்லாஹ்! எங்கள் அனைத்துக் காரியங்களின் முடிவையும் நல்முடிவாக்குவாயாக. இம்மையின் இழிவை விட்டும், மறுமையின் வேதனையை விட்டும் எங்களைக் காப்பாற்றுவாயாக. எங்களுக்கும் எங்கள் பாவங்களுக்கும் இடையில் சுற்றி வரும் உள்ளச்சத்தை எங்களுக்குத் தருவாயாக. உனது சுவனத்தின் பக்கம் கொண்டு சேர்க்கும் உன் வழிபாட்டை எங்களுக்குத் தருவாயாக.

யா அல்லாஹ்! எங்கள் கேள்விகளிலும் எங்கள் பார்வைகளிலும், எங்கள் சக்திகளிலும் சுகத்தைத் தருவாயாக. எங்களுக்கு அநீதி இழைத்தவர்களிடம் நீ பழிக்குப் பழி வாங்குவாயாக. எங்கள் பகைவர்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக. உலகத்தை எங்கள் முக்கிய நோக்கமாகவும், அதற்காகவே வாழக்கூடியவர்களாகவும் எங்களை ஆக்கிவிடாதே. எங்கள் சோதனைகளை எங்கள் மார்க்கத்தில் ஆக்கிவிடாதே. நாங்கள் செய்த பாவங்களின் காரணமாக உன்னை அஞ்சாதவனையும், கருணையில்லாதவனையும் எங்கள் மீது சாட்டிவிடாதே.

யா அல்லாஹ்! உனது அருளைப் பெற்றுக் கொள்ளத் தேவையான அனைத்தையும், உனது மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளத் தேவையான மன உறுதியையும் உன்னிடம் கேட்கிறேன். அனைத்து நன்மைகளையும் கனீமத்தாகத் தந்து அனைத்து தீமைகளை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக. சுவனம் கிடைத்து வெற்றி பெற்றவனாகவும், நரகத்தை விட்டு விடுதலை பெற்றவனாகவும் என்னை ஆக்குவாயாக.

கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாகிய இறைவனே! எங்கள் எந்தப் பாவத்தையும் மன்னிக்காமல் விட்டுவிடாதே. எங்கள் எந்தக் குறையையும் மறைக்காமல் விட்டு விடாதே. எங்கள் எந்தக் கவலையையும் சந்தோஷப்படுத்தாமல் விட்டு விடாதே. எங்கள் எந்தக் கடனையும் நிறைவேற்றாமல் வைத்து விடாதே. எங்களுக்குப் பயனுள்ள ஈருலக எந்தத் தேவைகளையும் நிறைவேற்றாமல் விட்டுவிடாதே.

யா அல்லாஹ்! என் இதயத்திற்கு நேர் வழி காட்டும்படியான அருளை, சிதறுண்டுக் கிடக்கும் என் செயல்களை ஒன்று சேர்க்கும்படியான அருளை, என்னிடமிருந்து மறைந்து போனவற்றை பாதுகாக்கும்படியான அருளை, என் முன்னுள்ளவற்றை உன்னளவில் உயர்த்திக் கொள்ளும்படியான அருளை, என் முகத்தை வெண்மையாக்கும்படியான அருளை, எனது அறிவைத் தூய்மைப்படுத்தும் படியான அருளை, எனக்கு நேர்வழி காட்டி என்னை விட்டும் பித்னாக்ளை அப்புறப்படுத்தும்படியான அருளை, அனைத்துத் தீய செயல்களை விட்டும் என்னைப் பாதுகாக்கும்படியான அருளை உன்னிடம் கேட்கிறேன்.

யா அல்லாஹ்! நியாயத் தீர்பட்பு நாளில் வெற்றியையும், நல்லோர்கள் வாழ்வையும், உயிர்த்தியாகிகள் இருப்பிடத்தையும், நபிமார்களின் தோழமையையும், எதிரிகளுக்குக் கேடாக எனக்கு வெற்றியையும் உன்னிடம் கேட்கிறேன். சரியான ஈமானையும், நற்குணத்தில் நம்பிக்கைகையயும் வெற்றிமேல் வெற்றியையும் எனக்குத் தந்தருள்வாயாக.

யா அல்லாஹ்! உனது அருட் கொடையையும், ஆபியத்தையும், பாவமன்னிப்பையும், விருப்பத்தையும், ஆரோக்கியத்தையும், பத்தினித்தனத்தையும், நற்குணத்தையும், உனது தீர்ப்பைப் பொருந்திக் கொள்ளும் உள்ளத்தையும். உன்னிடம் கேட்கிறேன்.யா அல்லாஹ்! என் நப்ஸின் தீங்கிலிருந்தும், உனது ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அனைத்து உயிர்ப்பிராணிகளின் தீங்கிலிருந்தும், உன்னிடம் காவல் தேடுகிறேன். (எனது நாயனாகிய நீயே) நேர் வழியில் நடத்துபவன்.

யா அல்லாஹ்! எனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறாய். நான் இருக்கும் இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். என் இரகசியத்தையும், பரகசியத்தையும் நீயே அறிந்தவன். உனக்குத் தெரியாமல் என் செயல்களில் எதுவும் இல்லை. நானோ பரம ஏழையாகவும் தேவையுடையவனாகவும் தஞ்சம் நாடி அபயம் கோரக் கூடியவனாக உள்ளேன். உன்னை அஞ்சி பயந்து நான் செய்த பாவங்களை ஒப்புக் கொண்டு மிஸ்கீன்கள் கேட்பது போல் கேட்கிறேன். பார்வை இழந்தவன் பயந்து உன்னை அழைத்துக் கேட்பது போல் கேட்கிறேன். கேவலமான பாவி இறைஞ்சுவது போல் இறைஞ்சிக் கேட்கிறேன். தலைதாழ்த்தி தன்னையே உனக்கு அர்ப்பணித்தவனாக உன்னிடம் இறைஞ்சுகிறேன். எனது பிரார்த்தணைகளை அங்கீகரிப்பாயாக.

ஸலவாத்தும் ஸலாமும் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் அனைவர் மீதும் உண்டவதாக.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s