தாய், தந்தையருக்கு பணிவிடை
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதாரம்: புகாரி
எது இனவெறி?
“ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள் “இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார்(பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்” என்றார்கள்.நூல்: அபூதாவூத்
நோன்பு வைத்திருபவர்கள் கடைபிடிக்க வேண்டியது
“யார் பொய்யான பேச்சுகளையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதிலோ, தாகித்திருப்பதிலோ அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புகாரி, திர்மிதி, இப்னுமாஜா
தாய், தந்தையரை ஏசுதல்
“ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)” என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)
ஆதாரம் : புகாரி
தாய், தந்தை
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘உன் தாய்’ என்றார்கள். அவர் ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் உன் தாய்’ என்றார்கள். அவர் ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர் ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘பிறகு உன் தந்தை’ என்றார்கள்.
நூல்: புகாரீ 5971
ஒவ்வொருவரும் பொறுப்பாளியே!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்.
தலைவர் பொறுப்பாளர். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார்.
ஆண், தனது குடும்பத்தின் பொறுப்பாளன். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான்.
பெண் (மனைவி) தனது கணவன் வீட்டிற்குப் பொறுப்பாளர். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள்.
பணியாளர் தன் எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளன். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான்.
அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்.”
மிகப்பெரும் பாவங்கள்
“(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்’ என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?’ என்றேன்.
அறிவிப்பவர் : அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி)
ஆதாரம் : புகாரி
பிரார்த்தனை அல்லாஹ்வுக்கே…
“உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்,) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது – இன்னும் நிராகரிப்போர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை”.
-திருக்குர்ஆன் 13:14
வெற்றி பெற்றவர்கள்
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
-திருக்குர்ஆன் 3:104
பொறுமையுடையோருக்கு….
“நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
-திருக்குர்ஆன் 2:155
பொறுமையுடனும், தொழுகையுடனும்
“நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.”
-திருக்குர்ஆன் 2:153
FOR MORE-