இம்மையும் மறுமையும்

இந்தப் பரந்த உலகில் பல்வேறுபட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்கள் அனைவரும் நிறத்தாலும் குணத்தாலும் மொழியாலும் பல விதமாக அமைந்துள்ளனர். இதில் பெரும்பான்மையான மக்கள், நம்மைப் படைத்த ஒருவன் இருக்கின்றான் என்பதை நம்பி வாழ்கின்றனர்.

மதங்கள் அதன் நம்பிக்கைகளும்

கடவுளை நம்பும் மனிதர்கள் பல மதங்களை பின்பற்றி வாழ்கின்றனர். ஒரு கடவுள் கொள்கை உள்ளவர்கள் , முக்கடவுள் கொள்கை உள்ளவர்கள், பல கடவுகள் கொள்கை உள்ளவர்கள் என்று பலவிதமான பல மதங்களை பின்பற்றி நடக்கின்றனர்.

இவ்வாறு பல விதமான கடவுள் கொள்கை உள்ளவர்கள், கடவுளுக்காகப் பல விதமான காரியங்களைச் செய்கின்றனர். இது போன்ற காரியங்களைச் செய்வதன் மூலம் நாம் இறை திருப்தியை அடையலாம் என்று நம்புகின்றனர்.

இவ்வாறு இறைவனது திருப்தியை அடைவதற்கு உலக விஷயங்களை முற்றிலுமாகத் தவிர்ந்து விட்டு, முழுக்க முழுக்க இறைவனுக்குரிய கடமைகளையே நிறைவேற்ற வேண்டும்; அவனுக்கு முற்றிலும் அடிபணிந்து உலகக் காரியங்களில் சற்றும் ஈடுபடாமல் நடக்க வேண்டும் என்று சிலர் எண்ணுகின்றனர். இதனால் தான் முனிவர்கள் என்று கூறப்படுபவர்கள் மக்கள் வாழும் பகுதியை விட்டு விட்டு, காடுகளில் போய் தவமிருந்து வரம் பெற்றதாகக் கூறுவார்கள்.

இவ்வாறு தான் பெரும்பான்மையான மதங்களும் கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் மட்டும் தான் இதிலும் மற்றும் பல விஷயங்களிலும் தன் தனித்துவத்தைக் காட்டியுள்ளது.

இறை திருப்தியை அடைய, அவனது அருளைப் பெற இவ்வுலக சுகங்களை முற்றிலுமாகப் புறக்கணித்து வாழ வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. மாறாக இவ்வுலக இன்பங்களை முற்றிலும் புறக்கணித்து வாழ்பவன் இறையருளைப் பெற முடியாது என்று கூறுகிறது.

இவ்வுலக இன்பங்களை முற்றிலும் புறக்கணித்தவர்கள் இறைத்தூதர்களின் வழிமுறைகளைப் புறக்கணித்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்கன் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்கன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே?  நாம் எங்கே என்று சொல்க் கொண்டனர். 

 
அவர்களில் ஒருவர், (இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப் போகிறேன் என்றார்.

இன்னொருவர், நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். 
 
மூன்றாம் நபர் நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்;  ஒருபோதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.
 
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள் தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (5063), முஸ்லிம் (2714)

படைத்தவனை வணங்குவதற்காகத் திருமணம் செய்வதைத் தவிர்ப்போம் என்றவரையும், உலக விஷயங்களைத் தவிர்த்து விட்டு இரவு முழுவதும் வணங்குவோம் என்றவர்களையும், மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைத் தவிர்த்து வாழ்நாள் முழுவதும் நோன்பு நோற்போம் என்று கூறியவர்களையும் நபிகளார் கண்டித்ததுடன் தாம் மணமுடித்துள்ளதை சுட்டிக் காட்டி படைத்தவனுக்கும் படைப்பினங்களுக்கும் செய்ய வேண்டிய இரு கடமைகளையும் தாம் செய்வதாகக் கூறியுள்ளது இஸ்லாம் காட்டும் ஆன்மீகத்திற்கு அழகிய முன்மாதிரியாகும்.

பெரும்பாலும் திருமணம் தான் உலக விஷயங்களில் முக்கியத்துவம் பெற்றது எனக் கருதுகின்றனர். திருமணம் செய்யும் போது இறை திருப்தியைப் பெற முடியாது. இறைக்கட்டளைகளை நிறைவேற்ற முடியாமல் முட்டுக்கட்டையாக இவை இருக்கும் என்று எண்ணுகின்றனர். ஆனால் இறைவன், அவனால் தேர்ந்தெடுத்த தூதர்கள் அனைவரையும் திருமணம் புரியச் செய்து அவர்களுக்கு சந்ததிகளையும் ஏற்படுத்தி உலகஇன்பங்களை முற்றிலும் புறக்கணித்தால்தான் இறைஅன்பை பெறமுடியும் என்ற கருத்தை மறுத்துள்ளான்.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். (அல்குர்ஆன் 13:38)

இதைப் போன்று இவ்வுலக வாழ்க்கைத் தேவையான வியாபாரம் செய்வதையும் இஸ்லாம் ஊக்குவிக்கிறது.

தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 62:10)

இதைப் போன்று இறைவன், இறைவன் என்று கூறிக் கொண்டு உலகத் தொடர்பை துண்டித்தவர்களை நபிகளார் கண்டித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஸல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) ஆகிய இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸல்மான் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்ற போது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். உமக்கு என்ன நேர்ந்தது? என்று அவரிடம் சல்மான் கேட்டார். அதற்கு உம்முத் தர்தா (ரலி) அவர்கள், உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை என்று விடையளித்தார்.


(சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து ஸல்மானுக்காக உணவு தயாரித்தார். ஸல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தாவிடம், உண்பீராக! என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, நான் நோன்பு நோற்றிருக்கிறேன் என்றார். ஸல்மான், நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன் என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் நின்று வணங்கத் தயாரானார்கள். 
 
அப்போது ஸல்மான் (ரலி) அவர்கள், உறங்குவீராக! என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் சல்மான், உறங்குவீராக! என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் ஸல்மான் (ரலி) அவர்கள், இப்போது எழுவீராக! என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம் ஸல்மான் (ரலி) அவர்கள், நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக! என்று கூறினார்கள். பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஸல்மான் உண்மையையே கூறினார்! என்றார்கள்.  அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரலி), நூல்: புகாரி (1968)

உலக விஷயங்களில் ஈடுபட வேண்டும்; அதுவும் கடமை தான் என்பதை இஸ்லாம் மட்டுமே கூறுகிறது என்பதை அறியலாம். இவ்வுலகம் மறுஉலகம் ஆகிய இரண்டு இன்பங்களையும் பெற்று வாழவே இஸ்லாம் பணிக்கிறது.

எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை  (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என்று கூறுவோரும்  மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் 2:201)

அதே நேரத்தில், உலகத்தின் இன்பங்களிலேயே முழுமையாக இருந்து விடாமல் படைத்தவனின் கடமைகளையும் நினைத்துப் பார்க்கவும் உலக விஷயங்களில் படைத்தவனின் கட்டளைகளை மீறாமல் நடந்து கொள்ளவும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
 
அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள். (அல்குர்ஆன் 24:37)

விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்!  அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)  நூல்கள்: புகாரி (2079), முஸ்லிம் (3076)

இவ்வாறு தொழில் செய்யும் போது நேர்மை, நீதமாக நடந்து கொண்டு இறையருளை  அவ்வியாபாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

ஆக, இவ்வுலக வாழ்க்கையிலும் மறு உலக வாழ்க்கையிலும் இறை திருப்தியை நாடி இரண்டிலும் வெற்றி பெறவே இஸ்லாம் வலியுறுத்துகிறது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s